வெடி வைத்தவர்கள் கைது

: மேலுார் அருகே மேலவலசையை சேர்ந்த புவனேஸ்வரி மற்றும் அவரது மகள் பூமிகா. இருவரும் நேற்று முன்தினம் வீட்டருகே இருந்த போது, அருகில் உள்ள குவாரியில் இருந்து பறந்து வந்த கற்கள் பட்டதில் இருவரும் படுகாயமடைந்தனர். கீழவளவு போலீசில் புவனேஸ்வரி புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வெடி வைத்த குற்றத்திற்காக திருமயத்தை சேர்ந்த மணிகண்டன்,30, பாண்டி,36, இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து 125 ஜெல், எலக்ட்ரிக் டெட்டனேட்டர் 46,1 கம்ப்ரசர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Read More

ஒரு ரூபாய்க்கு விபத்து காப்பீடு; வரும், 9ல் திட்டம் துவங்குகிறது

: விபத்து காலங்களில் உதவும் வகையில், பிரதமரின் “ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ மற்றும் “சுரக்ஷா பீமா யோஜனா’ திட்டங்களில் விண்ணப்பிக்க, வரும், 9ல், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

ஏழை, எளியோர் காப்பீடு வசதி பெறும் புதிய திட்டத்தை, பிரதமர் மோடி, வரும் 9ல் துவக்கி வைக்கிறார். வங்கி சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் பயனடையும் வகையில், இரண்டு காப்பீடு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.”ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ திட்டத்தின் கீழ், 18 முதல் 50 வயது வரையுள்ளவர்கள், ஆண்டுக்கு, 330 ரூபாய் செலுத்தி, காப்பீடு பெறலாம். உறுப்பினர் இறக்கும்பட்சத்தில், வாரிசுதாரருக்கு காப்பீடு பொருந்தும். இது, இறப்பு காப்பீடாக இருப்பதால், சரண்டர் அல்லது முதிர்வு தொகை பெற முடியாது.சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில், 18 முதல் 70 வயது வரையுள்ளவர்கள், ஆண்டுக்கு, 12 ரூபாய் மட்டும் செலுத்தி, காப்பீடு பெறலாம். காப்பீடு பெற்றவர், விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ, இரண்டு லட்சத்து, 200 ரூபாய் பெறலாம். விபத்தில் பகுதி ஊனம் ஏற்பட்டதால், ஒரு லட்சம் ரூபாய் பெறலாம்.

இரண்டு காப்பீடு திட்டங்களும், வரும் ஜுன் 1 முதல், 2016 மே 31 வரை, அமலில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும், காப்பீட்டுக்கான தொகை, வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு, காப்பீடு சேவை அளிக்கப்படும். ஒப்புதல் மற்றும் உறுதிமொழி படிவத்தில் உள்ளபடி, ஒவ்வொரு சேமிப்பு கணக்கில் இருந்தும் தொகை பிடித்தம் செய்யப்படும். இத்திட்டங்கள், அனைத்து வங்கி கிளைகளிலும் துவக்கப்படுகிறது. கணக்கு வைத்துள்ளவர்கள், கிளைகளை அணுகி, ஒப்புதல் மற்றும் உறுதிமொழி படிவம் சமர்ப்பித்து, காப்பீட்டு திட்டங்களில் இணையலாம். வரும், 9ல், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத் தில், வங்கி கிளைகள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதில், பொதுமக்கள், படிவத்தை சமர்ப்பிக்கலாம், என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read More

பிளஸ் 2 பொதுத்தேர்வில், திருப்பூர் கல்வி மாவட்டம், 94.31 சதவீத தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.

திருப்பூர் : பிளஸ் 2 பொதுத்தேர்வில், திருப்பூர் கல்வி மாவட்டம், 94.31 சதவீத தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. மாவட்ட தேர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது, கல்வித்துறையை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச், 5ல் துவங்கி, 31ல் நிறைவடைந்தது. திருப்பூர் மாவட்டத்தில், 58 அரசு பள்ளி; 7 மாநகராட்சி பள்ளி; 18 அரசு உதவி பெறும் பள்ளி; ஒன்பது சுயநிதி பள்ளி; 82 மெட்ரிக் பள்ளி என, 174 பள்ளிகளை சேர்ந்த, 10,281 மாணவர்கள்; 12,957 மாணவியர் என, மொத்தம் 23,238 பேர் தேர்வு எழுதினர்.தேர்வு முடிவு நேற்று காலை, 10:00 மணிக்கு வெளியானது. மதிப்பெண் தெரிந்துகொள்வதற்காக, மாணவ, மாணவியர், கம்ப்யூட்டர் சென்டர், பள்ளிகளில் திரண்டனர். அந்தந்த பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி விவரம், மதிப்பெண் விவரங்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தன. “கம்ப்யூட்டர் சென்டர்’களில் தேர்வு எண், பிறந்த தேதி சமர்ப்பித்து, “பிரின்ட்- அவுட்’ எடுத்துக்கொண்டனர்.

திருப்பூர் கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய மொத்த மாணவர்களில், 9,432 பேர்; மாணவியர் 12,484 பேர் என, 21,916 பேர் தேர்ச்சி பெற்றனர்; மாவட்ட தேர்ச்சி விகிதம், 94.31
சதவீதத்தை எட்டியுள்ளது. 1,200க்கு, 1,192 மதிப்பெண்களுடன், கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா, மாநில மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 1,186 மதிப்பெண்களுடன், சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் பள்ளி மாணவி கீர்த்தனா, உடுமலை ஸ்ரீனிவாசா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவன் கோகுல்தேவ் ஆகிய இருவரும், மாவட்ட அளவில் இரண்டாமிடம்; 1,185 மதிப்பெண்களுடன், உடுமலை சீனிவாசா மெட்ரிக் பள்ளி மாணவி நந்தினி மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.

படிப்படியான முன்னேற்றம்: திருப்பூர் கல்வியாண்டு துவங்கிய, 2008-09ல், பிளஸ் 2 தேர்ச்சி, 88.2 சதவீதமாக இருந்தது. இது, 2009-10ம் கல்வி ஆண்டில், 88.94 சதவீதமாக, 0.74 புள்ளி உயர்ந்தது. 2010-11ல், 89.48 சதவீதமாகவும், 2011-12ல், 90.80 சதவீதமாக உயர்ந்தது. 2012-13ம் கல்வியாண்டில், தேர்ச்சி விகிதம், 92.8 சதவீதத்தை எட்டியது. 2013-14ம் கல்வியாண்டில், 94.12 சதவீதமாக இருந்தது; தற்போது, 94.31 சதவீதத்துடன் மாவட்ட தேர்ச்சி விகிதம், கடந்த கல்வியாண்டை விட, 0.20 புள்ளிகள் உயர்ந்துள்ளது. தேர்ச்சி விகிதத்தில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம், 11வது இடத்தில் இருந்து, 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளதால், கல்வித்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More

டெங்கு ஒழிப்பு பணியில் கைகோர்ப்பு; வீடு வீடாக சென்று “அபேட்’ மருந்து தெளிப்பு

moskitoதிருப்பூரில், டெங்கு ஒழிப்பு பணியில் மாநகராட்சியுடன், மாநகர போலீசாரும் கைகோர்த்து களமிறங்கி, பணியாற்றினர். வீதி, வீதியாகச் சென்று, வீடுகளில் சேமித்து வைத்திருந்த குடிநீரில், “அபேட்’ மருந்து தெளித்தனர். விழிப்புணர்வு பிரசாரம் உள்ளிட்ட சுகாதார பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

திருப்பூரில் கடந்த 2 மாதங்களில் 5 பேர், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். மாவட்ட அளவில் 130 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக, சுகாதாரத்துறை கணக்கெடுத்துள்ளது. அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டு வருவதோடு, மருத்துவமனைகளில் காய்ச்சல் அறிகுறியுடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன், மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.டெங்கு நோய் தடுப்பு பணியில், மாநகராட்சியுடன், திருப்பூர் மாநகர போலீசாரும் கைகோர்த்துள்ளனர்.

வெள்ளியங்காடு பகுதியில் நேற்று கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் இப்பணியில் ஈடுபட்ட போலீசார், முதலில் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, களப்பணியில் இறங்கினர். போலீஸ் கமிஷனர் சேஷசாய் துவக்கி வைத்தார். துணை கமிஷனர்கள் திருநாவுக்கரசு, சுந்தர வடிவேல் முன்னிலை வகித்தனர். 2 உதவி கமிஷனர்கள் மேற்பார்வையில், 4 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 16 குழுக்கள் சுகாதார பணியில் ஈடுபட்டன.தலா ஒரு எஸ்.ஐ., தலைமையில் 9 போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் இருவர் அடங்கிய குழுவினர், பகுதி வாரியாக விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர். குழுக்களுக்கு தேவையான அளவு “அபேட்’ கரைசல், பிளீச்சிங் பவுடர், விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அனைத்து வீதிகளிலும் வீடு வீடாகச் சென்று, கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தண்ணீர் தொட்டி, பிளாஸ்டிக் தொட்டி, டிரம் உள்ளிட்ட கலன்களில் “அபேட்’ மருந்து தெளிக்கப்பட்டது. நாட்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த, கொசுப்புழுக்கள் மிதக்கும் தண்ணீர் அகற்றப்பட்டது. வீடுகளில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து, மருத்துவமனை செல்ல அறிவுறுத்தப்பட்டது. டி.ஆர்.ஓ., சப்-கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

விழிப்புணர்வு “சிடி’: குடியிருப்போர் சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகள் மூலம், அப்பகுதியினரை ஓரிடத்தில் திரட்டி, டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவ்வகையில், டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு “சிடி’யை மக்கள் மத்தியில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான இடம், ஏற்பாடுகளை செய்ய, இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.160 செவிலியர்: டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பணியில், திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர் 100 பேர், தனியார் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர் 60 பேர் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கேசவன் கூறுகையில், “”டெங்கு தடுப்பு பணிக்காக 160 செவிலியர் மாணவியர், வார்டுகளில் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு, மருத்துவம் சார்ந்த விஷயம் தெரியும் என்பதால், பயிற்சியாகவும் இருக்கும்,” என்றார்.

 

Read More

பெண்ணை தாக்கியவர் கைது

திருப்பூர் கோல்டன் நகரை சேர்ந்த பூபதி மனைவி சரஸ்வதி, 48. இவரது மகன் சிவப்பிரகாசமும், குத்தூஸ்புரத்தை சேர்ந்த சேகரும், கூட்டாக பால் ஏஜன்சி நடத்துகின்றனர். சிவப்பிரகாசம், வீட்டுக்குச் செல்லாமல், பெரும்பாலும் சேகர் வீட்டிலேயே தங்கியுள்ளார். சேகரிடம், சரஸ்வதி கேட்டபோது தகராறு ஏற்பட்டது. சேகரும், அவரது மனைவி உஷாவும் சேர்ந்து சரஸ்வதியை தாக்கி, மிரட்டல் விடுத்தனர். வடக்கு போலீசார், சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More

5 ரூபாய்க்கு சென்னை சிறுவன் விற்பனை? விசாரணையை துவங்கியது மத்திய அரசு

சென்னை: ‘க்விக்கர்.காம்’ இணைய தளத்தில், ‘சென்னை சிறுவன் விற்பனைக்கு…’ என, விளம்பரம் வெளியிட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விளம்பரத்தை வெளியிட அனுமதித்த, இணையதள நிர்வாகத்துக்கு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.

 

விளம்பரம்: ‘சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, ராகுல் என்ற சிறுவன், 5 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளான். தொடர்புக்கு – ஹமீதியா காம்பளக்ஸ், திருவல்லிக்கேணி’ என்ற வாசகங்கள் இடம் பெற்ற விளம்பரம், கடந்த டிசம்பரில், ‘க்விக்கர்.காம்’ இணையதளத்தில் வெளியானது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த, தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு கண்காணிப்பகம், தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திடம் புகார் செய்தது. ‘இப்புகார் மீது, விசாரணை நடத்த வேண்டும்; விசாரணை அறிக்கையை, 10 நாட்களுக்குள் தர வேண்டும்’ என, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையை, தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம், ஜன., 14ம் தேதி கேட்டுக் கொண்டது. உடனே மத்திய அரசு, ‘க்விக்கர்.காம்’ இணையதள நிர்வாகத்துக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளதோடு, விளம்பரம் கொடுத்தவரை பிடிக்கும்படி, தமிழக போலீசுக்கும் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து, ‘க்விக்கர்.காம்’ இணையதள நிர்வாகத்தைச் சேர்ந்த, பெயர் வெளியிட விரும்பாதவர் கூறுகையில், ‘தினமும் பல ஆயிரம் பேர், நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்து, ‘க்விக்கர்.காம்’ இணையதளத்தில் விளம்பரம் செய்கின்றனர். இந்த விளம்பரங்களை, சரிபார்க்க போதிய ஆட்கள் இல்லை. விளம்பரம் செய்தவரின் விவரமும் இல்லை’ என்றார்.

 

இணையதளத்தின் இந்த பதிலை, குழந்தை உரிமை ஆர்வலர்கள் ஏற்க மறுக்கின்றனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

 

முகவரி: ஊடகங்களில் விளம்பரம் செய்வோர், தங்கள் முகவரியை அளிக்க வேண்டும். எப்படிப்பட்ட விளம்பரங்களை வெளியிடலாம் என்ற, கட்டுப்பாடும், ஊடகங்களுக்கு உண்டு. இணையத்தில், ஒரு தகவலை வெளியிடுகிறோம் என்றால், அதை யார், எங்கிருந்து, எந்த உபகரணம் மூலம் வெளியிட்டார் என்பதை கண்டறிய முடியும். ‘க்விக்கர்.காம்’ இணையதளத்தில், சிறுவன் விற்பனைக்கு என்ற, விளம்பரத்தை வெளியிட்டவர் பற்றிய, விவரத்தை சேகரிப்பது கடினமான ஒன்று அல்ல. எனவே சம்பந்தப்பட்டவரை, பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

‘க்விக்கர்.காம்’ செய்வது என்ன? பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிடும் தளமாக, ‘க்விக்கர்.காம்’ இணையம் உள்ளது. இதில், உறுப்பினராக சேர்ந்த பின், தாங்கள் விரும்பும் பொருட்களை, விற்பனை செய்ய, விளம்பரங்கள் செய்யலாம். விளம்பரம் செய்யும் பொருளின் புகைப்படம், அதன் பயன்பாடு, விலை ஆகியவற்றை பொருளின் சொந்தக்காரரே முடிவு செய்யலாம். இதன் மூலம், பயன்படுத்திய பொருட்களை, விற்பனை செய்வது எளிது என, ‘க்விக்கர்.காம்’ இணையதளமும், விளம்பரம் செய்து வருகிறது.

 

Read More

10 ஆயிரம்!

திருப்பூர்: “மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில் 10 ஆயிரம் பேருக்கு ஆதார் பதிவு நடந்துள்ளது. அதிகம் பேர் விடுபட்ட வார்டுகளில் இருந்து கோரிக்கை வைக்கப்

பட்டால், சிறப்பு முகாம் நடத்தவும் தயார்’ என, ஆதார் பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்ட மக்கள் தொகையில், தகுதியானவர்களில் 60 சதவீதம் பேருக்கு, ஆதார் பதிவு நடைபெற்றுள்ளது. கடந்த டிச.,1ம் தேதி முதல், மாநகராட்சி மற்றும் தாலுகா அலுவலகம் வாரியாக, நிரந்தர முகாம் அமைக்கப்பட்டு, பதிவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.கடந்த ஆண்டுகளில், வார்டு வாரியாக ஆதார் பதிவு முகாம் நடத்தப்பட்டது. அப்போது, சாயத்தொழில் பிரச்னையால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, திருப்பூரில் வசித்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் பலர், வெளியேறிவிட்டனர். இதனால், ஆதார் பதிவுப்பணியில், திருப்பூர் மாவட்டம் பின்தங்கியது.

கடந்த மாதம் நிரந்தர முகாம் துவங்கியதும், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்தனர். மக்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், ஆதார் பதிவு முகாம்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அதன்படி, பட்டியலில் பெயர் இருந்தும், பதிவு செய்யாமல் விடுபட்டிருந்தவர்களுக்கு மட்டும், தற்போது பதிவு நடைபெற்று வருகிறது. புதிதாக விண்ணப்பிப்பதற்கான படிவம் வழங்குவது, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள், மார்ச் மாதத்துக்கு பிறகு விண்ணப்பித்து, டோக்கன் வழங்கப்படும் நாளில், குடும்பத்துடன் வந்து பதிவு செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுபட்டுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், நிரந்தர முகாம்களில் பதிவுப்பணியை மேற்கொள்வது, பெரும் சவாலாக இருக்கும். எனவே, விடுபட்டவர்களுக்கான பதிவு முடிந்ததும், வரும் மார்ச் மாதத்தில் இருந்து, வார்டுக்கு 2 நாட்கள் வீதம் சென்று, பதிவு செய்ய வேண்டும். சரியான நேரத்தில் முன்னறி

விப்பு செய்து இம்முகாம்களை நடத்தினால், விடுபட்டவர்களுக்கு பயனாக இருக்கும். இது குறித்து, ஆதார் பொறுப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது,

“திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில் 10 ஆயிரம் பேரின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வரும் மார்ச் மாதத்துக்குள் 30 ஆயிரம் பேருக்கு பதிவு நடக்கும். அதன் பிறகே, புதிதாக விண்ணப்பம் செய்வதற்கு, படிவம் வழங்கப்படும். படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்வோரின் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, குறிப்பிட்ட நாட்களில் உடற்கூறு பதிவு நடக்கும். ஒரே வார்டில் அதிகப்படியானவர்கள் விடுபட்டிருந்து, விண்ணப் பித்திருந்தால், கவுன்சிலர்களின் வேண்டுகோளை ஏற்று, அந்தந்த வார்டுகளில் சிறப்பு முகாம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்,’ என்றனர்.

Read More

பேரூராட்சிகளில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அனுப்பர்பாளையம், : அவிநாசி பேரூராட்சி மன்றத்தின் சார்பில், புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று ஜெகதாம்பாள்ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் மணிச்சாமி, துணைத் தலைவர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இது குறித்து செயல் அலுவலர் மணிச்சாமி கூறியது: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்திரவின்படி பொங்கல் திருவிழாவை புகையில்லா பொங்கல் பண்டிகையாக கொண் டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவிநாசி பேரூராட்சியில் ஜனவரி 7 முதல் போகிப்பண்டிகையான 14ம் தேதி வரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இதில் பொதுமக்களால் பிளா ஸ்டிக் முதலான பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதை தடை செய்ய வலியுறுத்தப்பட்டது. பள்ளிகுழந்தைகள் மூலம் அவரவர் வீடுகளில் பழையபொருட்களை தீயிட்டு கொளுத்தாமல் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வாகனங்களில் ஒப்படைக்க வேண்டும் என பெற்றோர்களிடம் வலியுறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதே போல திருமுருகன்பூண்டி பேரூராட்சி மன்றத்தின் சார்பில், இராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று செயல் அலுவலர் நந்தகோபால் தலைமையில்  நடைபெற்றது.

Read More

ஓவியப்போட்டியில் ஊத்துக்குளி கொங்கு பள்ளி மாணவர் முதலிடம்

திருப்பூர், ஈரோடு மாவட்ட அளவிலான பழனிகுப்புசாமி கவுண்டர் நினைவு 13ம் ஆண்டு தமிழ் இலக்கிய மன்ற போட்டிகள் ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. பேச்சு, ஓவியம் மற்றும் வினாடி-வினா போட்டிகளில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 18 பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதைதொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு பள்ளித்தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி தமிழ்துறை சம்பந்தமான கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிர்வாகக்குழு உறுப்பினர் நளினி ராமசாமி குத்துவிளக்கு ஏற்றினார். பள்ளி செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் சந்திரசேகர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சாமியப்பன், பெரியசாமி மற்றும் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வருமாறு: 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் சிவன்மலை ஜேசீஸ் பள்ளி மாணவி ஹரிணிப்பிரியா முதல் இடமும், ஈரோடு ஏ.இ.டி.பள்ளி மாணவர் கவுசிக்கன் 2ம் இடம், ஊத்துக்குளி கொங்கு பள்ளி மாணவர் பாலாஜி 3ம் இடமும் பெற்றனர். 9 முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கான போட்டியில் ஈரோடு ஏ.இ.டி.பள்ளி மாணவர் கவுரிசங்கர் முதல் இடமும், சிவன்மலை ஜேசீஸ் பள்ளி மாணவி ரஞ்சனி 2-ம் இடமும், திருப்பூர் கொங்கு பள்ளி மாணவி சுபாஷினி 3-ம் இடமும் பெற்றனர். 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்போட்டியில் சிவன்மலை ஜேசீஸ் பள்ளி மாணவி அழகுசுஜா முதல் இடமும், குன்னத்தூர் கொங்கு பள்ளி மாணவர் பிரசாந்த் 2-ம் இடமும், திருப்பூர் விவேகானந்தா பள்ளி மாணவி இஷா 3-ம் இடமும் பெற்றனர். கொங்கு பள்ளி மாணவி ரம்யாவிற்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
அதேபோல் 9 முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கான ஓவியப்போட்டியில் ஊத்துக்குளி கொங்கு பள்ளி மாணவர் கவுரிசங்கர் முதல் இடமும், பலவஞ்சிபாளையம் வேலவன் பள்ளி மாணவி மோனிஷா 2-ம் இடமும், திருப்பூர் விவேகானந்தா பள்ளி மாணவி அபிராமி 3-ம் இடமும் பெற்றனர். 15-வேலம்பாளையம் சாரதா பள்ளி மாணவி மிருதுளாவுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான வினாடி-வினா போட்டியில் பலவஞ்சிபாளையம் வேலவன் பள்ளியை சேர்ந்த தினகரன், வசந்த் ஜோடி முதல் இடத்தையும், 15 வேலம்பாளையம் சாரதா பள்ளியை சேர்ந்த கவியரசு, ஸ்ரேயா ஜோடி 2-ம் இடமும், ஈரோடு ஏ.இ.டி.பள்ளியை சேர்ந்த தியான் அபர்ணா, சுவாதி ஜோடி 3-ம் இடத்தையும் பெற்றனர். அதேபோல் 9 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான போட்டியில் ஈரோடு ஏ.இ.டி. பள்ளியை சேர்ந்த அண்ணாமலை அபர்ணா, கார்த்திகேயன் ஜோடி முதல் இடமும், மொரட்டுபாளையம் அரசு பள்ளியை சேர்ந்த துர்கா, ஜெயகுமார் ஜோடி 2-ம் இடமும், சிவன்மலை ஜேசீஸ் பள்ளியை சேர்ந்த சிவசக்தி, ரமேஷ் ஜோடி 3-ம் இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோவை முனைவர். திலகவதி சண்முகசுந்தரம் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் கீதாராணி தியாகராஜன் செய்து இருந்தார். விழாவினை பள்ளி தமிழ்ஆசிரியர் ராசகுமாரன் தொகுத்து வழங்கினார். முடிவில் தமிழ் ஆசிரியர் ஸ்டீபன் நன்றி கூறினார்.

Read More